2019 நாடாளுமன்றத் தேர்தலில் குழம்பிய குட்டையில் மீன் பிடித்த தி.மு.க!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் குழம்பிய குட்டையில் மீன் பிடித்த தி.மு.க!

(Written in May 2019) 

சமீபத்தில் நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றதாகவும், கட்சியின் மதிப்பும், திரு.ஸ்டாலினின் மதிப்பும் வானளாவ உயர்ந்து விட்டதாகவும் சில ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆராய்ச்சி அவசியமாகிறது.

மக்கள் தி.மு.கவுக்கு முழுதும் விரும்பிதான் வாக்களித்துள்ளார்களா என்று ஆராய்ந்து பார்க்கும் போது அப்படித் தெரியவில்லை.

சற்று விளக்கமாகத்தான் பார்ப்போமே!

தி.மு.கவின் வாக்கு வங்கி சராசரியாக 25 முதல் 30 சதவீதத்துக்குள் அடங்கும். கடந்த காலங்களில் பார்த்தால் இதுதான்.

இப்போது எப்படி திடீரென்று 50 சதவீதத்துக்கு மேல்?

இது தி.மு.கவின் மதிப்பு உயர்ந்ததால் உயர்ந்ததில்லை! மற்ற கட்சிகளில் நடக்கும் குழப்பங்களால் கிடைத்த வாய்ப்பு.

ஒன்றா, இரண்டா குழப்பங்கள் இப்போது தமிழக அரசியலில்!

இதோ, அந்தக் குழப்பங்களின் பட்டியலும், அவை எப்படி தி.மு.கவிற்கு சாதகமாகப் போயின என்ற விபரங்களும்:

(1) முதலில் அ.தி.மு.கவை எடுத்துக் கொள்வோம். ஜெ. இருந்த வரை, அ.தி.மு.க ஒரு இரும்புக் கோட்டையாகவே இருந்தது. அவருமே கூட தரம் தாழ்ந்து அசிங்கமாக தனி நபர் விமரிசனங்கள் செய்து தன் கட்சியை வளர்க்கவில்லை. அ.தி.மு.கவின் மதிப்பு சிம்மாசனத்தில் இருந்தது.
ஜெ. மரணத்துக்குப் பின் சசிகலா குடும்பம் வசம் கட்சி போக ஆரம்பித்தது. தோழியாக இருந்த சசிகலா, ஜெ. வின் அரசியல் வாரிசு போல அவரைப் போலவே தோற்றத்தைக் கூட மாற்றிக் கொண்டு வலம் வந்தார். யார் யாரோ வெளியில் வந்து பேச ஆரம்பித்தார்கள்.

தன்னால் முடியாத போதெல்லாம் ஜெ. தற்காலிக முதல்வராக நியமித்த பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களை திறம்பட சந்தித்து நல்ல பெயர் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரை சசிகலா குடும்பம் பதவி விலகச் சொல்ல, அவரும் ஜெ.சமாதிக்கு தியானம் போக, பிரச்னைகள் வெளிவர ஆரம்பித்தன.

ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையில் சசிகலா குடும்பம் ஈடுபட கூவத்தூர் ரிஸார்ட் அல்லோல கல்லோலப் பட்டது. கூவத்தூரில் கூத்து நடந்து வரும் போது சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வர, சசிகலா சிறைக்குப் போகவேண்டி வர, எடப்பாடி பழனிச்சாமி திடீர் முதல்வர் ஆக்கப் பட்டார். (தியானம் செய்யப் போகாமல் இருந்திருந்தால் தானே இன்று வரை முதல்வராக இருந்திருக்கலாமே என்று பன்னீர் வருந்திக் கொண்டிருப்பது தனிக்கதை)

அதன் பின்னர், கட்சியையும், ஆட்சியையும் பாதுகாக்க, பன்னீர்செல்வம் குழுவினரும் எடப்பாடியுடன் சேர, இன்றுவரை தொடர்கிறது ஆட்சி. இடையில், அ.தி.மு.கவில் இருந்து சசிகலா குடும்பம் முழுதும் வெளியேற்றப் பட, 18 எம்.எல்.ஏக்களை கையில் வைத்துக் கொண்டு தினகரன் பூச்சாண்டி காட்டிய குடைச்சல்களை எடப்பாடி, பன்னீர் கூட்டணி சாமர்த்தியமாக சமாளித்தது. அதற்கு துணையாக மோடியுடனும் நல்ல உறவை வளர்த்துக் கொண்டு புது ஊக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. கடைசியில் தினகரனின் பூச்சாண்டி விளையாட்டு புஸ்வானமாகிப் போனது.

தி.மு.கவும் பிளவுகளை சந்தித்த கட்சிதான் என்றாலும், அ.தி.மு.கவின் இந்தப் பிளவை ஊதிப் பெரிதாக்கி மக்களிடம் வெற்றிகரமாகக் கேலி பேசி வந்தது தி.மு.க. இப்படியே மக்களிடம் அ.தி.மு.க ஏதோ தன் கட்சி உட்பட உலகமே சந்தித்திராத குழப்பத்தில் இருப்பது போல மக்களிடையே ஒரு பிம்பத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தியது தி.மு.க.

இப்படி அ.தி.மு.கவின் இமேஜை ஊதிப் பெரிதாக்கி தி.மு.க டேமேஜ் செய்தது அ.தி.மு.கவின் தோல்விக்கு முதல் காரணம்.

(2) இரண்டாவதாக, இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையே கூட ஜி.எஸ்.டி உட்பட அரசின் வரி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும், வங்கிகளுக்கு மக்களை வரச் செய்ய, வரவு, செலவுகளை சட்ட பூர்வமாக கணக்கில் காட்ட மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, எளியோருக்கும் தொழில் செய்ய கடன் கிடைக்க அவர் தந்த முத்ரா திட்டம், குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கான கடன் வட்டி மானியம், போன்ற முயற்சிகளை ஆதரித்து முழுமையாக வாக்களித்துள்ள போது, தமிழ்நாட்டில் மட்டும் அவற்றுக்கு எதிர்மறை ச்£யம் பூசி, ‘மக்களை வறுத்தெடுக்க எடுத்த நடவடிக்கைகள்’ என்று தி.மு.க தீவிரமாக எதிர் பிரசாரம் செய்து மக்களை நம்ப வைத்தது. எதிலுமே குறுக்கு வழியிலேயே மக்களை கொண்டு போய் பழக்கப் படுத்தி இருந்ததால், மக்களும் அந்த எதிர்மறை பிரசாரங்களை நம்பி பி.ஜே.பி க்கும் அதற்குத் துணையாக இருந்த அ.தி.மு.கவுக்கும் எதிராக ஓட்டளித்தார்கள் என்பதும் ஒரு காரணம்.

(3) தங்கள் குடும்பத்துக்கு இத்தனை காலம் உறுதுணையாக இருந்த ஜெ. மறைந்ததும், அவர் வளர்த்த கட்சியின் இமேஜ் டேமேஜ் ஆகிறது என்று தெரிந்தும், டேமேஜ் ஆக்கவேண்டும் என்பதற்காகவே 18 எம்.எல்.ஏக்களும், தினகரனும் தங்களை வளர்த்த கட்சிக்கு எதிராக திரும்பத் திரும்ப கொடுத்த பேட்டிகள், கவிழ்ப்போம் என்ற மிரட்டல்கள் போன்றவை மக்களிடையே அ.தி.மு.க பற்றிய எதிர்மறை கருத்தை உருவாக்கிக் கொண்டு இருக்க, இங்கே எடப்பாடியும், பன்னீரும் அமைதியாக கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற மிக திறமையாக செயல்பட்டும், அவர்களிடம் தினகரன், ஸ்டாலின் போன்றவர்களிடம் இருந்த ஆர்ப்பாட்டமும் மிரட்டலும் நிறைந்த அணுகுமுறை இல்லாமல் நாகரீகமாக நடந்து கொண்டதும், மக்களிடம் நல்ல தாக்கத்தை உருவாக்க முடியாமல் போனது. நம் மக்களுக்கு நாகரீகமாக நடந்து கொண்டால் சுவாரசியமாக இருக்காத அளவு கட்சிகளும், 24 மணி நேர ஊடகங்களும் அவர்களை பழக்கப் படுத்தியிருந்தன. எடப்பாடி, பன்னீரின் நாகரீகமான பேட்டிகளை விட, ஸ்டாலின், தினகரனின் அதிரடி ஆர்ப்பாட்ட அறிவிப்புகள் மக்களிடையே சென்று சேர்ந்தன. அ.தி.மு.கவுக்கு கிடைத்த இந்த ஆர்ப்பாட்டமான எதிர்மறை விளம்பரம், தி.மு.கவுக்கு சாதகமாகப் போனது.

(4) அடுத்ததாக நீட் தேர்வு இந்தியா முழுதும் எதிர்ப்பு இல்லாமல் செயல் பட்டுக் கொண்டிருக்க, தமிழ்நாட்டில் அதற்காக செய்யப் பட்ட எதிர்மறை பிரசாரம் கடுமையானது. என்னமோ செய்யக் கூடாத ஒன்றை செய்துவிட்டது போலவும், போட்டிகள் நிறைந்த உலகில் தமிழக மாணவர்கள் கடினமாக எதையுமே முயற்சி செய்துவிடக் கூடாது என்பது போல தி.மு.க மற்றும் பிற கட்சிகளால் செய்யப் பட்ட எதிர்மறை விமரிசனங்கள் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவின் இமேஜை தமிழ்நாட்டில் வெகுவாகக் குறைத்தன. நீட் தேர்வு முந்தைய காங்கிரஸ் அரசின் திட்டம் என்பதை தி.மு.கவும், பிற எதிர்க்கட்சிகளும் இலகுவாக மறைத்து விட்டன. வழக்கம் போல் மக்கள் இதையெல்லாம் யோசிக்காமல் தி.மு.கவுக்கு வாக்கை செலுத்தினார்கள்.

(5) அதேபோல கூடங்குளம், ஸ்டெரிலைட், ஹைட்ரோகார்பன் போன்ற பிரச்னைகளில் எடப்பாடி அரசின் மீது எராளமாய் தூற்றுதல்கள் மற்றும் ‘தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும்’ என்பது போல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றோர் சம்பள உயர்வு, கூடுதல் பென்ஷன் கேட்டு திரும்பத் திரும்ப நடத்திய வேலை நிறுத்தங்கள், அவர்களுக்கு ஆதரவாக கட்சிகளின் ஆவேச பேச்சுக்கள் போன்றவை, எடப்பாடி மற்றும் மோடி பெயரை தமிழகத்தில் வெற்றிகரமாய் டேமேஜ் செய்தன. மக்களும் ஒரு திட்டத்தை தேவையா இல்லையா என்பதை ஆராய்ந்து பார்க்கத் தயாரில்லை. பலர் ஒன்றைக் கூறினால் அது உண்மை என நம்பினார்கள்.

(6) இந்தியா முழுதும் உள்ள மக்கள் மோடியின் நல்ல முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் போது, தமிழ்நாடு மட்டும் தி.மு.கவின் இத்தகைய திட்டமிட்ட எதிர்மறை பிரசாரங்களால் வக்ரமாக யோசித்து அளித்த வாக்குகளால் தமிழ்நாட்டுக்கு பெரிதாக எந்த நன்மையும் கிட்டப் போவதில்லை. மாநிலத்திலும் மத்தியிலும் பழைய ஆட்சிகளே தொடர்கின்றன. எனவே மக்கள் தி.மு.கவின் எதிர்மறை பிரசாரங்களை நம்பி மாற்றி அளித்த வாக்குகள் அவர்களுக்கு முழுப் பயன் அளிக்காமல் போகக் கூடும் நிலை இப்போது.

(7) ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் போன்ற கட்சி ஊடகங்கள் சசிகலா குடும்ப வசம் போனதால் எடப்பாடி அரசால் தன்னுடைய திட்டங்களை மக்களிடையே அவர்கள் விரும்பிய படி கொண்டு சேர்க்க முடியவில்லை. ஆனால் திமுகவுக்கு ஆதரவாக அவர்களின் தொலைக் காட்சி தவிர சன் தொலை காட்சியும் நேர்மறை செய்திகள் மட்டும் தந்து உதவியது. கடைசி சில மாதங்களில் ஆளும் கட்சி தனக்காக ஒரு செய்தி தொலைக்காட்சியும், தினசரி பத்திரிகையும் துவக்கினார்கள். ஆனால் அவை இன்னும் முழுமையாக மக்களிடம் போய் சேரவில்லை.

(8) கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் ஒரு மதக் கலவரம் கூட நடந்ததில்லை எனினும், பா.ஜ.க மீது ‘சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி’ என்ற கருத்து தமிழ்நாட்டில் அனைத்து எதிர்க் கட்சிகளால், குறிப்பாக தி.மு.க வால் திரும்பத் திரும்ப உறக்கக் கூறப் பட்டது. இதுவும் பா.ஜ.க, அ.தி.மு.கவின் பின்னடைவுக்கு காரணம்.

(9) தவிர, சில தொகுதிகளில் அ.தி.மு.க, அ. ம.மு.க மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் விழுந்த ஓட்டுகளை கூட்டிப் பார்த்தால் அது தி.மு.க பெற்ற ஓட்டுகளை விட அதிகம் வருகிறது. எனவே இந்த இரண்டு புதிய கட்சிகள் அ.தி.மு.கவின் ஓட்டுகளை பிரித்ததும் சில தொகுதிகளை அது இழக்கக் காரணம். விஜயகாந்தின் தேமுதிக ஆரம்பத்தில் பெற்ற ஓட்டுகளை விட கமல் மற்றும் தினகரனின் கட்சிகள் மிகவும் குறைவாகவே பெற்றிருந்தாலும் அ.தி.மு.கவின் 5-8 சதவீத ஓட்டுக்களையாவது அந்த இரு கட்சிகள் பிரித்திருக்கக் கூடும்.

உதாரணமாக, கீழ்கண்ட தொகுதிகளில் இந்த 3 சிறு கட்சிகள் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி தோற்கச் செய்தன:

சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகள்:

திருப்போரூர், ஓசூர், தஞ்சாவூர், பெரியகுளம் (தனி), ஆண்டிப்பட்டி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய ஏழு தொகுதிகள்.

பாராளுமன்றத் தொகுதிகள்:

தர்மபுரி, சேலம், திருப்பூர், கோவை, சிதம்பரம் (தனி), மதுரை, விருது நகர், ராமநாதபுரம் ஆகிய எட்டு தொகுதிகள்.

இப்படி, அ.தி.மு.க மீது தி.மு.க எற்படுத்திய சந்தேக மற்றும் குழப்ப அலையில் பல ஆயிரம் ஓட்டுகள் இந்த சிறு கட்சிகளுக்கு போய்விட்டன. இந்த மூன்று சிறு கட்சிகள் அ.தி.மு.கவின் ஓட்டுகளை பிரீத்திருக்கவில்லை என்றால், அ.தி.மு.க கூட்டணிக்கு மேலும் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும், எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளும் கூடுதலாகக் கிடைத்திருக்கும்.

இப்படி கட்சிக்குள் பிளவு, பெரும்பான்மை பிரச்னைகள், கட்சியை உடைத்தவர்களின் பிளாக்மெயில் நடவடிக்கைகள், எதிர்மறை பிரச்சாரங்கள், வலுவான தலைவி இல்லாமல் போனது என்று இத்தனை நெருக்கடிகள் இருந்தாலும், எடப்பாடி அரசு, ரேஷன் பொருட்களை வழங்குவதில் நன்றாகவே செயல்பட்டது. அருமையான பருப்பு, போதுமான அரிசி தடையின்றி வழங்கப் பட்டது. தடையில்லா மின்சாரம் வழங்கப் பட்டது. அனைத்து நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப் பட்டன. கலவரங்கள் இன்றி மாநிலம் அமைதியாக இருந்தது.

எப்படியோ, எடப்பாடியும் பன்னீரும், பல பிரச்னைகளை திறமையாக சமாளித்த போதிலும், தி.மு.க ஆட்சியில் 14 மணி நேரம் மின்சாரம் இன்றி திட்டித் தீர்த்ததை மக்கள் ஏழே வருடத்தில  மறந்துவிட்டு மீண்டும் அதற்கே வாக்களித்தார்கள் என்றால் அரசியலில் தமிழ்நாட்டு மக்கள் தீர யோசித்து வாக்களிப்பது இல்லை என்பதையும், எதையும் சுலபமாக மறந்து விடுபவர்கள் நம் மக்கள் என்ற கசப்பான உண்மையையும் மக்களின் இந்த மறதியை நம்பியே தமிழகத்தில் இரு பிரதான கட்சிகளும் உள்ளன என்பதையும் நாம் புரிந்து  கொள்ளலாம். இது தவிர, பணம் அதிகம் யார் தருகிறார்கள் என பார்த்து ஒரு கட்சியின் ஆட்சி அவலங்களை எளிதில் மறந்து, அதிகம் கொடுத்த கட்சிக்கு விசுவாசமாக (!!) வாக்களித்து விடுகிறார்கள் என்பதையும்  நாம் புரிந்து கொள்ளலாம்.

இப்படி அ.தி.மு.க ஏகப்பட்ட பிரச்னையில் இருக்கும் நேரத்தில், தனது அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் மூலம் குழம்பிய குட்டையை மேலும் மேலும் தினமும் கிளறிவிட்டு, அ.தி.மு.க பற்றியும், பா.ஜ.க பற்றியும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, வேறு வழியின்றி தனது கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களை வெற்றிகரமாக ஸ்டாலின் திருப்பி விட்டுள்ளார்.

இதுதான் தி.மு.கவின் வெற்றிக்குப் பின் உள்ள காரணங்களே தவிர, தி.மு.க மீது கனிந்து உருகி அந்தக் கட்சிக்கு முழு ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்தார்கள் என்பதை அரசியலை கூர்ந்து கவனிப்பவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

அடுத்த தேர்தலில், இதே மக்கள் அப்படியே மாற்றி பட்டனை அழுத்தவும் தயங்க மாட்டார்கள். ஏனென்றால், அட, நம் மக்களுக்கு நிரந்தர கொள்கையே இல்லை என்பது கசப்பான உண்மை.

கருத்துகள்

POPULAR IN THIS SITE