ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமா? அவரது ஜாதகத்தின் படி நடுநிலை அலசல்!
எங்கு பார்த்தாலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததைப் பற்றியே எல்லோரும் உணர்வு பூர்வமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்! ஆனால், பலரும் சில முக்கியமான விஷயங்களைப் பற்றிமறந்துவிட்டே பேசுகிறார்கள்! அதையெல்லாம் கேட்டு ரஜினி ஒரு முடிவு எடுத்தாரானால் அவர் சிரமப் படும் போது இப்படி தூண்டி விட்டவர்கள் யாரும் உதவிக்கு இருக்க மாட்டார்கள்! முழுமையான தகவல்களை அவருக்கு தருவதற்காகவே இந்தக் கட்டுரை.
ரஜினி ரசிகர் என்ற மனநிலையில் படிக்காமல் ஒரு நடுநிலையானமனதுடன் இதைப் படிக்குமாறுஆரம்பத்திலேயேகூறிவிடுகிறேன்!
அவரது ஜாதகம் என்ன சொல்கிறது என்பதை முதலில் பார்த்துவிடுவோம்:
(1) ரஜினிகாந்த் ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் சனியும், கேதுவும் வலிமையாக உள்ளனர்.எட்டாமிடத்தில் ராகு இருக்கிறார். ஏழில் இருக்கும் குரு லக்னத்தை பார்ப்பது சிறப்பு. ஆயினும், குருவும் சந்திரனும் அமைக்கும் குரு-சந்திர யோகம் ஜாதகத்தில் இல்லை.ஆனால், ஐந்தாமிடத்தில் புத-சுக்ர யோகம் அமைந்துள்ளது.சந்திரமங்கள யோகமும் கூட உள்ளது! நாலாமிடத்தில் லக்னாதிபதிசூரியன் இருப்பதால், அவருக்கு அரசியல் ஆர்வம் இருக்கும். செவ்வாய்மகரத்தில் உச்சம்!
இந்தஅமைப்பினால், ரஜினிகாந்துக்கு பெரும் புகழ் கிடைக்கும்.
(2) ஆனால், அவருக்கு தடையாக இருப்பதும், அவரது நற்பெயருக்கு சோதனையாக இருக்கப் போவதும் இரண்டாமிடமும், எட்டாமிடமும்தான். கூடவே ஏழரை சனி. இரண்டில் உள்ள சனியும் கேதுவும் உணர்த்துவது என்னவென்றால், அவர் எதிலுமே அதிகம் பற்றில்லாதவர் என்பதுதான்.ஆசை இருக்கும்.
(3) இரண்டாமிட சனி-கேது கூட்டணியின் காரணமாக, அவருக்கு இளம் வயதில் உலகஇன்பங்களில் இருந்த அதிகபற்று, குறைந்துகொண்டே வரும். மேலும், இளம் வயதில் சில தேவையற்ற பழக்கங்கள் (புகை, மது) அவரை ஆட்கொண்டிருக்கும். குடும்ப வாழ்க்கையைவிட ஆத்ம விஷயங்களில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
(4) ஆயினும், அவரது ஆன்மிகம் நிலையாக ஒரு விஷயத்தில் இல்லாமல் பலவும் கலந்த ஒரு கலவையாக இருக்கும். அவரது குடும்பத்தில் அவர் ஒரு பார்வையாளர் போலமட்டுமே பற்றின்றி இருப்பார். நிர்வாகம் முழுதும் குடும்பத்தாரிடம் இருக்கும்.
(5) இரண்டாமிட சனி-கேது கூட்டணியின் காரணமாக, ரஜினி அவ்வளவு எளிதாக முடிவெடுக்கமாட்டார். எந்த விஷயத்தையும் செய்வதற்கு அவர் அளவுக்கதிகமாகத் தயங்குவார். சிலசமயங்களில், அவர் முடிவெடுப்பதற்குள் சம்பந்தப்பட்ட விஷயமே முடிந்து போயிருக்கும். அவரின் அரசியல் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகளுக்கு, ரஜினியின் இந்த குணமேமிகப் பெரிய எதிரியாகும்.
(6) இரண்டாமிட சனி-கேது கூட்டணியின் காரணமாக ரஜினிக்குள்ள மற்றொரு எதிர்மறை அம்சம், அவர் ஒரு வார்த்தை பேசினாலும், அது பெரும் விவாதமாகி விடும். அவர் அரசியலுக்கு வந்தால், அவரை நோக்கி கண்டனக் கணைகள் வந்துகொண்டேதான் இருக்கும்.
(7) ஆனால், ரஜினி உள்ளுக்குள்ளேயே புழுங்குவாரே தவிர, அவற்றுக்கு பதில் சொல்ல அவருக்கு மனம் வராது.
(8) எட்டாமிட ராகுவால், ரஜினி சிறு விஷயங்களுக்குக் கூட உடனடியாக அப்செட் ஆகிவிடுவார். ஆனால், அதனை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். இது தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல குணம்தான் என்றாலும், அரசியலுக்கு உதவாது. ரஜினி தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் மன அமைதியை இழக்கவேண்டிய சந்தர்ப்பங்கள்அடிக்கடி வரும்.
(9) இரண்டாமிட சனி-கேது கூட்டணி மற்றும் எட்டாமிட ராகு காரணமாக, ரஜினிதன்னுடைய முடிவுகளைமாற்றிக்கொண்டே இருப்பார். இதனால் அவர் அதிக விமரிசனங்களைச் சந்திக்கவேண்டியிருக்கும்.
(10) இரண்டாமிட சனி-கேது கூட்டணிகாரணமாக ரஜினியால் அவரது கட்சியில் அவரது குடும்ப ஈடுபாட்டைத் தவிர்க்க இயலாது. இதனால் அவரது கட்சியும் தி.மு.க, தே.மு.தி.க, சமாஜ்வாதி, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் போல குடும்ப ஆதிக்கம் நிறைந்த கட்சி என்று பெயரெடுக்கவேண்டி வரும்.
(11) இரண்டாமிடசனி-கேது கூட்டணிகாரணமாக ரஜினியால் அவரது வாக்குறுதிகளை சுலபமாக நிஜமாக்க முடியாது. அவர் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருப்பதே நல்லது.
(12) இரண்டாமிட சனி-கேது கூட்டணி காரணமாக, ரஜினியால் மற்றவர்கள்தான் பலனடைவார்களே ஒழிய, ரஜினிக்குப் பலன் குறைவு. ரஜினிக்கு விருப்பமில்லாவிட்டாலும், சூழ்நிலைகளின் கட்டுப்பாட்டில் சில விஷயங்களை செய்தேஆக வேண்டிய தருணம் அடிக்கடி வரும்!
(13) மகர ராசிக்காரரான ரஜினிக்கு ஏழரை சனி துவங்குகிறது! சிம்ம லக்னப்படி சனி அவருக்கு ஆறு மற்றும் ஏழாமிடத்துக்கு அதிபதியாவார்! இது கடன் மற்றும் எதிரிகளை தரக்கூடியநிலையாகும். ரஜினி அரசியலுக்கு வருவது ஏழரை கால சனி பகவானுக்கு மிகவும் வசதியாகப் போய்விடும்! எதிரிகளையும், பொருளாதார குறைவையும் வாரி வழங்க வாய்ப்பிருக்கிறது!
இனி மற்ற பொதுவானவிஷயங்களை நடுநிலையாகஆராய்வோம்:
(14) ரஜினிக்கு ஏற்கனவே 69 வயதாகிவிட்டது. உடல் ரீதியாக அவருக்கு தொடர் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. இந்தநிலையில் தனியாக அரசியல் கட்சி தொடங்கி ஊர் ஊராக அலைந்து கட்சியை பலப்படுத்த அவர் ரொம்பவே பிரயத்தனப்பட வேண்டும்.
(15) ரஜினி தனக்குப் பிறகு கட்சியை நடத்த தன்னைப் போலவே பிரபலமான ஒரு தலைவரை உருவாக்கவேண்டும். ரஜினிக்காக கட்சிஎன்றால், ரஜினிக்குப் பிறகு? இல்லாவிட்டால், அ.தி.மு.க வில் செல்வி.ஜெயலலிதாவுக்குப் பிறகு இரண்டாம் கட்ட பிரபலங்கள் இல்லாததால் ஏற்படும் பிரச்னைகளை அவர் கவனத்தில் கொள்ளவேண்டும்.
(16) என்னதான் ரஜினி ஊழலை ஒழிப்பேன் என்று கூறினாலும், அரவிந்த் கேஜ்ரிவாலை அவர் நினைவில் கொள்ளவேண்டும். ரஜினி ஊழலற்றவராக இருக்கலாம். ஆனால், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்களை கட்டுப்படுத்துவது சாதாரண விஷயம் இல்லை. செலவு செய்ததை எடுக்க முடியவில்லை என்றால் கட்சியினர் காலப்போக்கில் சலிப்படைவது இயல்பு.
(17) தமிழக அரசியல் ஒரு ஒயிட் காலர் வேலையல்ல. சேறு வாரி இறைக்கவேண்டும்; திடீர் திடீரென்று கட்சி மாறுவது, கூட்டணி மாறுவது, ஏமாற்றுவது, வாக்குறுதிகளை மறத்தல், மக்களை மொழி, மதம், இனம் அடிப்படையில் பிரித்தாளுவது, வன்முறை, ஓட்டுக்கு பணம், இப்படி தமிழக அரசியல் சூழல் ரஜினியின் மென்மையான குணத்துக்கு ஒத்து வராதது. ஆனால், அவர் நாகரீகமானவர்! அவரால் அநாகரீகமாகச் செயல்படமுடியாது!அதுதான் பிரச்னையே!
(18) ரஜினி வேறு; எம்.ஜி.ஆர் வேறு!
எம்.ஜி.ஆர் காலத்தில் வேறு பொழுதுபோக்குகள் இல்லை; சினிமா மட்டுமே அவர்களின் பிரதான பொழுதுபோக்கு! மேலும், எம்.ஜி.ஆர் தி.மு.கவில் ஏற்கனவே பலகாலம் இருந்தவர். சினிமாவிலேயே தன்னை ஒரு மாபெரும் தலைவராக திறமையாக போட்டியின்றி உருவகப்படுத்தியவர் அவர் ஒருவரே! சினிமாவில் கூட அவர் புகை பிடிக்கவோ, மது அருந்தவோ இல்லை! தி.மு.கவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது மக்களின் ஆதரவால் முதல்வரானவர்.
இக்காலத்தில் பல்வேறு பொழுதுபோக்குகளில் சினிமாவும் ஒன்று, அவ்வளவே! நடிகர்களுக்கு எம்.ஜி.ஆர் காலத்தில் ரசிகர்களல்லாத மற்ற பொதுமக்களிடமும் அவருக்கு இருந்த அளவு கிரேஸ், இப்போதைய நடிகர்களுக்கு அவர்களது ரசிகர்களைத் தவிரமற்ற பொதுமக்களிடம் இல்லை.
ரஜினி மீது எல்லா மக்களுக்கும் பரிதாபம் வருமளவு அவருக்கு எந்த துரோகமும் யாராலும் இழைக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசியலில் ஜெயிக்க வேண்டுமானால் சினிமா புகழ் மட்டும் போதாது! மேலும் சில கணக்குகள் உள்ளன.
(19) பெரிய வெற்றிடமெல்லாம் ஏற்பட்டுவிடவில்லை!
ஜெ. இல்லை, ஆனால், அ.தி.மு.க தொண்டர்கள் அப்படியே உள்ளனர். ஒருவேளை, ரஜினியின் கட்சிக்கு அ.தி.மு.கவிலிருந்து
4-5% ஓட்டுகள் வரை பிரியலாமே ஒழிய, பெரும்பாலான அ.தி.மு.கவினர் ரஜினிக்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது.
தி.மு.கவில் திரு.கருணாநிதி அவர்கள் இல்லை, ஆனால், தி.மு.க தொண்டர்கள் அப்படியே உள்ளனர். தி.மு.க தொண்டர்கள் அவ்வளவு எளிதில் இன்னொரு கட்சிக்கு வாக்களித்துவிட மாட்டார்கள்! தி.மு.க வாக்குகள் சுமார் 3-4% ரஜினிக்குக் கிடைக்கலாம்.
ஆக, இரண்டு பெரிய கட்சிகளும், மற்ற சிறு கட்சிகளும் சேர்த்து சுமார்
67-68% வாக்குகளைத் தம் வசம் வைத்திருக்கிறார்கள்! மீதி சுமார் 32%
ஐத்தான் ரஜினி விளையாடவும், விரிவுபடுத்தவும் பயன்படுத்தவேண்டும்!
ரஜினியின் ரசிகர்களிலேயே பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
ரஜினியின் மன்றத்தில் உறுப்பினராகச் சேர்பவர்களின் எண்ணிக்கையும், ஓட்டாக விழும் எண்ணிக்கையும் மாறுபடக் கூடும்! காங்கிரஸ் கட்சி சில ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் புது உறுப்பினர்களைச் சேர்த்தது. ஆனால், அவை ஓட்டாக விழவில்லை. ஒரே நபர் பல கட்சிகளிலும் உறுப்பினராக இருக்கும் கூத்துக்கள் தமிழகத்தில் அதிகம்.
ஆக, அ.தி.மு.கவின் 4%, தி.மு.கவின் 4%,
ரஜினி ரசிகர்களின் சுமார்
7-8% (தி.மு.க, அ.தி.மு.க, ரசிகர்கள் கழிந்தது போக) என 15%
வாக்குகள் ரஜினிக்கு கிடைக்கலாம்! நடுநிலை வாக்காளர்கள் சுமார் 6-7% ரஜினிக்கு வாக்களிக்கலாம்! இதனால் ரஜினிக்கு சுமார்
21-22% வாக்குகள்கிடைக்கலாம்! ரஜினி ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், குறைந்தது
32-35% வாக்குகளாவது பெற்றால்தான் முடியும்! ஓட்டுப் பிரிப்புகள் எப்போதுமே அ.தி.மு.க வுக்கோ அல்லது தி.மு.க.வுக்கோ சாதகமாகவே முடிகின்றன! அல்லது தொங்கலை ஏற்படுத்துகின்றன!
கமல் கட்சியால் பெருமளவுவாக்குகளைப் பிரிக்க முடியாது என்றாலும், மொத்தத்தில் 6-7 சதவீத வாக்குகள் இரு முன்னணிக் கட்சிகளிலிருந்தும், ஏன், ரஜினியின் கட்சியிலிருந்தும் கூடபிரியலாம். தினகரன் வேறு தனி அணியாக தேர்தல்களில் போட்டியிடப் போகிறார்.
இதன்மூலம், ஓட்டுப் பிரிப்புகள் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இதனால், புதியவர்கள் யாருக்கும் பலன் கிடைத்து விடாது. மீண்டும் இரு பெரிய கட்சிகளுக்கே ஓட்டுப்பிரிப்பால் பலன் கிடைக்கும்.
(20) தி.மு.கவும், அ.தி.மு.கவும் போட்டி போட்டுக்கொண்டு கூட்டணிகளில் தீவிரகவனம் செலுத்தலாம்! ரஜினியும் கூட இந்த கூட்டணிச் சகதியில் பிற்காலத்தில் இறங்கவேண்டி வரக் கூடும்! இது அவரது ஊழலுக்கு எதிரான நிலையை நீர்த்துப் போகச் செய்யும்! நம்மிடையே சிறந்த உதாரணமாக திரு.விஜயகாந்த் இருக்கிறாரே! அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைத்த பின் அடுத்த தேர்தலில் அவர் கட்சிஅடைந்த நிலையைச் சொல்லவும் வேண்டுமா!
(21) நடிகர் என்பதால் அவர்களுக்கு மக்களின் அறிமுகம் கிடைக்கிறது. அவ்வளவே! அதை ஓட்டாக மாற்ற வேண்டுமானால் அது எல்லாராலும் முடியாது. சிவாஜி கணேசனாலேயே முடியாத விஷயம் இது! எம்.ஜி.ஆரும், என்.டி.ஆரும், ஜெயலலிதாவும் மட்டுமே அதை திறமையாக சாதித்தவர்கள்!
ரஜினிக்கு எதுதான் சரியாக இருக்கும்?
அவரின் உண்மையான விருப்பம் ஆன்மீகம்தான் என்றாலும், விரும்பியோ, விரும்பாமலோ சினிமாவிலும்,
1996 இலும் அவர் பேசிய சில வசனங்கள் அவர் மீது தந்துள்ள அழுத்தமே அவர் அரசியல் வருகையை அறிவித்தே ஆகவேண்டிய கட்டாய நிலையைத் தந்துள்ளது போலத் தெரிகிறது! ஏதோ ஒரு தயக்கம் இன்னமும் அவரிடம் இருப்பதாகவே கூர்ந்து நோக்குபவர்களுக்குத் தோன்றுகிறது.
அவர் அரசியலுக்கு வந்தால் கூட முழு மனதுடன் வருவதற்கான வாய்ப்பில்லை. சூழ்நிலைகளே அவரை அரசியலை நோக்கித் தள்ளியிருக்கின்றன.
எனவே, அவர் இப்போது கூட தன் நிம்மதியான, ஆன்மீகமான வாழ்வுக்குத் திரும்ப முடியும்! என்றுமே தன் இயல்புக்கேற்ற செயல்களைச் செய்யும்போதே ஒரு மனிதன் சந்தோஷமாக இருக்கமுடியும்!ரஜினி அரசியலைத் தன் இயல்புக்கு மாறானது என்றும், தற்போதைய உடல் ஆரோக்கியத்துக்குச் சுமையானது என்றும் உணர்ந்தால், அரசியலுக்கு வருவதை இப்போது கூடதவிர்க்கமுடியும்!
இதன் மூலம் தொடர்ந்து படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் இமேஜுடன் சந்தோஷமாக ரசிகர்கள் மனதில் வாழ முடியும்! ஆன்மீகத்தையும் அமைதியாகத் தொடர முடியும்!
ஒருவேளை, அரசியல் களத்துக்கு வருவதே நல்லது என அவர் நினைத்தால், பாரதீய ஜனதா (பி.ஜே.பி) போன்ற ஒரு தேசியக் கட்சியில் சேர்ந்து, தமிழ்நாட்டில் கட்சி வெல்லும்போது தன்னையே முதல்வராக நியமிக்கவேண்டும் என்றஉத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்!
இப்போது உள்ள கட்சிகளில், ரஜினியின் இயல்புக்கு ஓரளவாவது ஒத்துப் போகிறகட்சி அது மட்டுமே! பாரதீய ஜனதாவின் முதல்வர் வேட்பாளராக ரஜினி அறிவிக்கப் பட்டு பொதுத் தேர்தலை ரஜினி சந்தித்தால், மோடியின் இன்னும் குறையாத பிரபலமும், ரஜினியின் புது அரசியல் பிரபலமும், பிரசாரமும் ஒன்று சேர்ந்து மேஜிக்கை உருவாக்கக் கூடும்!
ரஜினிக்கு எது நல்லதோ அதையே நான் சான்றுகளுடன் எழுத முயன்றிருக்கிறேன்!
எல்லாம் வல்லஇறைவன் ரஜினிக்கு நல்ல ஆரோக்கியத்தையும், புகழையும் தரட்டும்!
வாழ்த்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Add your comments here in a healthy language