திருவள்ளுவர் இந்துவா? - அதிர வைக்கும் ஆய்வுக் கட்டுரை!
திருவள்ளுவர் இந்துவா? - அதிர வைக்கும் ஆய்வுக் கட்டுரை!
(By ராஜன், எழுத்தாளர், ADMIN)
(ஒரு கட்டுரையாக தினமலரில் வெளியிடப்பட்டது)
(ஒரு கட்டுரையாக தினமலரில் வெளியிடப்பட்டது)
தமிழ் நாட்டில் சில பிரபலங்கள் இடையே ஒரு நோய் உண்டு. சனாதன தர்மம் சார்ந்த விஷயங்களில் மட்டும் தான் அவர்கள் குற்றம் கண்டுபிடிப்பார்கள். சனாதன தர்மம் மேல் சிலருக்கு ஏன் இவ்வளவு கோபமோ தெரியவில்லை. இத்தனை வெறுப்புகளையும் தாண்டித் தான் இந்தியாவின் சனாதன தர்மம் செழித்து வளர்ந்து வந்துள்ளது. நூற்றுக் கணக்கான ஆண்டு அந்நிய ஆதிக்கத்தால் கூட அசைத்துப் பார்க்க முடியாத தர்மம் இது.
சரி, இனி, வள்ளுவருக்கு வருவோம். வள்ளுவர் எந்த உடை போட்டு இருந்தார் என்று யாரும் பார்த்தது இல்லை. எனவே, யாருமே அதை திட்டவட்டமாக வரையருக்க முடியாது. கற்பனையில் வரையப் பட்ட ஒரு ஓவியமே இப்போது நம்மிடம் உள்ளது. காவி என்பது ஒரு கட்சியின் அல்லது இந்து மதத்தின் அடையாளம் அல்ல. காவி என்பது, உலகியலைக் கடந்த துறவு வாழ்வு வாழ்பவர் என்பதைக் குறிப்பது மட்டுமே. திருவள்ளுவரின் கருத்துக்களை ஆராய்ந்தால், அவர் ஒரு துறவியாக அல்லது இல்லறத்திலிருந்து பின் துறவியாக இருந்திருக்கவே நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.
திருவள்ளுவர் ஜைன மதத்தை சேர்ந்தவர் என்று சிலர் கூறுவர். அவர் ஜைனர் என்றால், இறைவனின் தாமரைப் பாதத்தில் பணிவது, அவன் புகழ் பாடுவது பற்றியெல்லாம் எழுதி இருக்க மாட்டார். இந்து இலக்கியங்களில் வருவது போன்ற வர்ணனைகளை செய்திருக்க மாட்டார்..
திருவள்ளுவர் புத்த மதத்தவராக இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில், புத்த மதத்திலும் இறைவனின் தாமரைப் பாதங்களில் பணிதல், வேதங்கள் (மறை) ஆதரவு என்ற கோட்பாடுகள் இல்லை.
பிற மதங்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பில்லை. இறைவனைப் பற்றிய அவரது கருத்துக்களைப் பார்த்தால் அவர் நிச்சயம் இந்து மதம் சார்ந்த பழக்க வழக்கங்கள் கொண்டவராகத் தான் இருந்திருக்க முடியும்.
சனாதன இந்து தர்மம் நான்கு வகையான படிநிலைகளை பரிந்துரைக்கிறது - தர்ம, அர்த்த, காம, மோட்ச. அதாவது அறம், பொருள் மற்றும் இன்பம் வழியே வீடுபேற்றை அடைவது. அதையே திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என்று மூன்று பால்களாக கூறி வீடுபேற்றுக்கு வழிகாட்டி இருக்கிறார். அவர் சனாதன தர்மத்தை சேர்ந்தவர் என்பதற்கு அவரது இந்த திருக்குறள் நூலின் வடிவமைப்பே சான்று.
மேலும் அவரின் அரசியல் கருத்துக்கள் அர்த்தசாஸ்திரத்தில் காணப் படுவதை ஒத்துள்ளன.
திருக்குறள் 610 மற்றும் 1103 இல் அவர் விஷ்ணு பற்றி குறிப்பிடுவதும், 167, 408, 519, 565, 568, 616, 617 ஆகிய குறள்களில் லக்ஷ்மி பற்றியும் குறிப்பிடுவது அவர் ஒரு வைஷ்ணவ நம்பிக்கையாளர் என்பதைக் குறிக்கின்றது. தவிர, பிரம்மா பற்றியும், 'அடி அளந்தான்' என்று வாமன அவதாரம் பற்றியும் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
பரிமேலழகர் தெளிவாகக் கூறி இருக்கிறார்: திருவள்ளுவர் திருக்குறளில் எழுதியிருக்கும் சில பதங்களான மறை (வேதம்), கடவுள்கள் என்ற பன்மை, நற்குணம் (சத்துவ குணம்), முனி, சாது, மறு பிறவி, ஆதி பகவன் (முழுமுதற்கடவுள்), போன்றவை இந்து இலக்கியங்களில் மட்டுமே காணக் கிடைப்பவை என்று. இந்தக் கட்டுரையில் தரப்பட்டுள்ள எடுத்துக் காட்டுகள் பரிமேலழகர் கூறுவதை உறுதிப் படுத்துவதை நாம் உணர முடியும்.
திருக்குறளை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்த ஜெ.ஜெ.க்ளாசவ் என்ற அறிஞர் "திருவள்ளுவர் இந்து மத நம்பிக்கை கொண்டிருந்தார்" என்று குறிப்பிடுகிறார்.
திருவள்ளுவர் நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், பறை அடிக்கும் குலத்தைச் சேர்ந்தவர் என்றும், விவசாய குலத்தைச் சேர்ந்தவர் என்றும் பல ஆசிரியர்கள் பலவிதமாகக் கூறுவர். மறைமலை அடிகள், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். தமிழக அரசும் இதையே 1935 ஆம் ஆண்டு முதல் பின்பற்றுகிறது. சோமசுந்தர பாரதியார் திருவள்ளுவரின் காலத்தை கி.மு.300 என்கிறார்.
திருக்குறளிலேயே கூட அதன் ஆசிரியர் திருவள்ளுவர் என்று குறிப்பிடப் படவில்லை. பின் வந்த திருவள்ளுவமாலை என்ற நூல் தான் அதன் ஆசிரியர் திருவள்ளுவர் என்கிறது. பல வாழ்க்கை வரலாற்று நூல்களிலும் அவர் மனைவியின் பெயர் வாசுகி என்று குறிப்பிட்டுள்ளனர். வாசுகி என்பது முழுமையான இந்துப் பெயராகும்.
உண்மையில் ஆங்கிலேயர் காலத்தில் வெளிவந்த திருவள்ளுவரின் படங்களில் அவர் இந்து மத சின்னங்களுடனே இருந்துள்ளார். பின்னர், திரு.பக்தவத்சலம் முதல்வராக இருந்த போது, எதிர்க் கட்சியில் இருந்த தி.மு.கவின் வேண்டுகோளை ஏற்று சேலத்தைச் சேர்ந்த திரு.வேணுகோபால சர்மா என்ற ஓவியரால் வரையப் பட்ட மத சின்னங்கள் இல்லாத தற்போதைய திருவள்ளுவர் படம் சட்டசபையில் வெளியிடப் பட்டது.
ஓருவரின் பின்னணியை அவரின் படைப்புகளில் இருந்து ஊகிக்க முடியும். எனவே, திருக்குறளை ஆராய்வது திருவள்ளுவரின் இறை நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்க உதவும். எனவே அதை இனி நடுநிலையாக ஆராய்வோம்.
சனாதன தர்மத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் ஏராளமான கருத்துக்கள் திருக்குறளிலும் காணக் கிடைக்கின்றன. அவற்றின் தொகுப்பே இந்தக் கட்டுரை.
(1) "உடல் மட்டுமே அழிகிறது; ஆத்மா உடல் மாற்றிச் செல்கிறது" என்பது கீதையின் அடிப்படைக் கருத்து. கண்ணன், கீதை (அத்-2, பதம்-22) யில் "பழைய ஆடைகளைத் துறந்து புது ஆடைகளை ஒருவன் அணிவது போல, பழைய உடலை நீக்கி, புது உடலை ஆத்மா அடைகிறது" என்கிறார். வள்ளுவரும், திருக்குறள் 338 இல் நிலையாமை அதிகாரத்தில் "தன் முட்டை எனும் கூட்டிலிருந்து வேறிடம் போகும் பறவை போல, உயிர் வேறிடம் செல்கிறது" என்கிறார்.
மேலும், திருக்குறள் 340 இல் "புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு", அதாவது, "துச்சமான அறியாமை மயக்கம் தரும் இவ்வுடம்பில் வாழும் உயிருக்கு நிலையாக வசிக்க வேறு உடல் இன்னும் அமையவில்லையோ" என்கிறார்.
(2) "இந்த உடலில் பரமாத்மா என அறியப்படும் இறைவனும் இருக்கிறார்" என்கிறது கண்ணனின் கீதை (அத்-13, பதம்-23). வள்ளுவரோ தன் 3 ஆவது குறளில் "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்" அதாவது "இதயம் என்ற தாமரை மலரில் வீற்றுள்ளவரின் திருவடிகளை சேர்ந்தவர், அனைத்து உலகுக்கும் மேலான வீட்டில் அழிவின்றி வாழ்வார்" என்கிறார். வீடு என்பது பரமபதத்தைக் குறிக்கிறது.
(3) மேலும், திருவள்ளுவர் தன் திருக்குறள் 1103 இல் இப்படிக் கூறுகிறார்: "தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு", அதாவது "தாமரைக் கண்ணனுடைய உலகமானது, ஒருவன் காதலியின் தோள்களில் துயிலுவதை விட இனிமையானதோ?" என தாமரைக் கண்ணனைக் குறிப்பிடுகிறார்.
(4) இவ்வுலகின் நிலையாமையை சனாதன தர்மம் மட்டுமே விரிவாகப் பேசுகிறது. கீதையில் (அத்-8, பதம்-15) கண்ணன் "இவ்வுலகம் துன்பங்கள் நிறைந்த தற்காலிக இருப்பிடம்" என்று கூறுகிறார். வள்ளுவரோ, திருக்குறள் 336 இல், "நெருதல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு", அதாவது, "நேற்று இருந்தவன் இன்றில்லை என்ற நிலையாமையை பெருமையாகக் கொண்டது இவ்வுலகம்" என்கிறார்.
(5) வேறெந்த தர்மத்திலும் இல்லாத சனாதன தர்மத்தில் மட்டுமே உள்ள கர்மா, ஊழ் போன்ற மிக உயர்ந்த கருத்துக்கள் திருக்குறளில் வள்ளுவரால் உரைக்கப் பட்டுள்ளன. வள்ளுவர் ஊழ் என்ற ஒரு அதிகாரமே படைத்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
திருக்குறள் 376 இல் "பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்ய்த்துச் சொரியினும் போகா தம", அதாவது "ஊழ் (கர்மா) காரணமாக தமக்கு உரிமையில்லாத பொருட்களை எவ்வளவு பாதுகாத்தாலும் அது நில்லாது; தமக்கு உரியவை எனில் தாமே விடுத்தாலும் போகாது" என்கிறார்.
கர்மா அனைத்திலும் மிக வலிமையானது என்பதையும் வள்ளுவர் விளக்கியுள்ளார். திருக்குறள் 380 இல், "ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்" , அதாவது, "ஊழை விடவும் வலியது வேறென்ன உள்ளது? ஊழைத் தவிர்க்க வேறு வழியில் போனாலும் அங்கேயும் ஊழ் தானாகவே முன்னே நிற்கும்" என்கிறார்.
இதை விட சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் கருத்து வேறென்ன இருக்க முடியும்?
(6) திருக்குறள் 2 இல், "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்", அதாவது "இறைவனின் பாதம் தொழாதவருக்கு அனைத்தும் கற்றதின் பயன்தான் என்ன?" எனக் கேட்கிறார்.
(7) நரக வாழ்வு பற்றியும் கூறுகிறார் வள்ளுவர். திருக்குறள் 243 இல் "அருள் சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல்" அதாவது "அருள் கொண்ட நெஞ்சம் உள்ளோர்க்கு, இருள் சூழ்ந்த துன்ப உலகில் வாழும் வாழ்க்கை இல்லை" என்கிறார். நரகங்கள் இருண்ட உலகங்கள் என்கின்றன நம் வேத சாஸ்திரங்கள்.
(8) துறவிகள் எப்படி இருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் கூறுவதை அப்படியே வள்ளுவரும் கூறுகிறார். கண்ணன் கீதையில் (அத்-3, பதம்-6) "புலன்களையும் புலன் சார்ந்த உறுப்புகளையும் கட்டுப் படுத்திக் கொண்டு, நுகர்பொருட்களையே நிநைத்துக் கொண்டு இருக்கும் ஒருவன் போலியானவன்" என்கிறார். வள்ளுவர் இதை அப்படியே திருக்குறள் 276 இல் "நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்" அதாவது "மனதில் ஆசைகளைத் துறக்காமல், ஆசை இல்லாத துறவிகளைப் போல் வழ்வோரைப் போல கொடியோர் வேறு இல்லை" என்கிறார்.
(9) வீடுபேறு அடைவதைப் பற்றிக் குறிப்பிடும் போது கூட வள்ளுவர் நம் வேத இலக்கியங்களுடன் ஒத்துப் போகிறார். கண்ணன் கீதை (அத்-8, பதம்-16) யில் "என் உலகை அடைந்தவர் என்றும் மீண்டும் பிறப்பதில்லை" என்கிறார். அதையே வள்ளுவர் திருக்குறள் 10 இல் "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்" அதாவது "இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்கள் பிறவி எனும் பெருங்கடலைக் கடக்க முடியும். பிறரால் அதைக் கடக்க முடியாது" என்கிறார்.
(10) நம் வேத சாஸ்திரங்கள் நான்கு வகை பாவங்களை தடை செய்துள்ளன. தகாத உடலுறவு, மாமிசம் உண்ணாமை, சூதாடுதல், போதைப் பொருட்கள் தவிர்த்தல் என்பவையே அவை. வள்ளுவரோ, இந்த நான்குக்கும் தனித்தனி அதிகாரங்களே படைத்துள்ளார்.
பிறன் மனை விழையாமை பற்றி திருக்குறள் 148 இல் "பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனென்றோ ஆன்ற ஒழுக்கு" அதாவது "பிறர் மனைவியை விரும்பாத பேராண்மை சான்றோர்க்க்கு பெரும் அறம் மட்டும் அல்ல, முழுமையான ஒழுக்கமும் ஆகும்" என்கிறார்.
புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் 251 ஆவது குறளில் "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்" அதாவது "தன் உடல் பெருக்க, இன்னோர் உடம்பைத் தின்பவன் எவ்வாறு அருள் கொண்டவனாக இருக்க முடியும் என்று கேட்கிறார்"
சூது பற்றி 938 ஆவது குறளில் "பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள் கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது" அதாவது "இருக்கின்ற பொருளை அழித்து பொய்வழியில் சென்று, அருள் கெடுத்து துன்பமும் வருத்தமும் அடையச் செய்யும் சூது" என்கிறார்.
போதைப் பொருட்கள் பற்றி, கள்ளுண்ணாமை அதிகாரம் 922 ஆவது குறளில் "உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார்" அதாவது "கள்ளை அருந்தாதீர்கள். சான்றோரிடம் நல்ல பெயர் ஈட்ட விரும்பாதார் அருந்தலாம்" என்கிறார்.
(11) சனாதன தர்மம் புலனடக்கத்துக்கு முக்கியத்துவம் தருவதுடன், மறு பிறவி மற்றும் பல பிறவிகள் உண்டு என்கிறது. வள்ளுவரும் இதைப் பல இடங்களில் உறுதிப் படுத்தியுள்ளார். திருக்குறள் 126 இல் "ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து" அதாவது "இப்பிறவியில் ஆமை போல ஐம்புலங்களையும் அடக்கி வாழ்பவனை ஏழு பிறவியிலும் அது காப்பாற்றும்" என்று பல பிறவிகள் பற்றி கூறுகிறார்.
(12) இறைவனின் புகழை, திருநாமத்தைப் பாடுவதை சனாதன தர்மம் கலியுகத்தில் சிபாரிசு செய்கிறது. இதைப் பற்றி வள்ளுவர் திருக்குறள் 5 இல் "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" அதாவது "இறைவனின் புகழ் பாடும் ஒருவனிடம், இருளைத் தரும் இரு வினைகளும் சேராது" என்கிறார். நம் நற்செயல்கள் கூட மீண்டும் நல்ல பிறவியைக் கொடுக்கும். ஆனால் அதுவும் தற்காலிகமானவையே. எனவே, பிறவிகளைத் தராத நிலையைப் பெற இறைவனின் புகழ் பாட வேண்டும் என்கிறார்.
இப்படி ஆராய்ந்தால், திருக்குறளில் வள்ளுவர் சனாதன தர்மத்தை வலியுறுத்தும் பல கருத்துக்களைக் கூறியுள்ளதை உணர முடியும். எனவே, வள்ளுவர் பொது தர்மத்தையே எழுதி இருந்தாலும், அவர் சார்ந்த சனாதன தர்மத்தின் தாக்கம் திருக்குறளில் ஆங்காங்கே இருப்பதை அறிய முடியும்.
இந்த உண்மைகளை அறியாமல், பொத்தாம் பொதுவாக கருத்து கூறும் பெரியவர்களையும், தொலைக் காட்சி விவாதம் நடத்துபவர்களையும் பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது. இந்தக் கட்டுரையை வைத்துக் கொண்டு இனி பேசலாமே!
அதே சமயம் இந்த விஷயத்தில் வள்ளுவருக்கு உடை மாற்றம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்னைகள் உருவாகக் கூடும். அதைத் தவிர்க்கலாம். அவரின் உருவம் எப்படியோ இருக்கட்டும். அவர் இந்தியாவின் அழிக்க முடியாத சனாதன தர்மத்தின் தாக்கத்துடன் திருக்குறளைப் படைத்துள்ளார் என்பதை நிரூபிக்கவே இந்தக் கட்டுரை.
இந்தக் கட்டுரையைப் படித்த பிறகாவது, காரணமின்றி கோபப் படுவோர் அமைதி காக்கட்டும். அதுவே இந்தியன் என்ற வகையில் என் ஆழ்ந்த விருப்பமாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Add your comments here in a healthy language